Wednesday, September 12, 2012

அமாவாசையில் கிரிவலம் வந்தால் மன நிம்மதி கிடைக்கும்!


Benefits Tiruvannamalai Girivalam

சிவபெருமானுக்கு உரிய பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி தலம் ஆகும். அடி முடி அறியா அண்ணாமலயாக மலை ரூபமாக இங்கு இறைவன் எழுந்தருளியுள்ளார். இந்த மலையை இறைவனாக நினைத்து தினந்தோறும் வலம் வருகின்றனர் பக்தர்கள். மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் சிறப்பு வாய்ந்தது.
ஒரு சாதாரண நாளில் திரு அண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் கடுமையாக நீங்கிவிடும். பொருள் வேண்டுபவர்கள் பவுர்ணமியிலும், அருள் வேண்டுபவர்கள் அமாவாசையிலும் அண்ணாமலையாரை கிரிவலம் செய்வது மரபு. இதில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் எல்லோரும் அமாவாசையில் தான் அண்ணாமலையாரை கிரிவலம் வந்து சிவனின் அருள் பெற்றுள்ளனர் என்பது ஐதீகம்
கிரிவல பயன்கள்
கிரிவலம் செல்வதால் மனஅழுத்தம் குறையும். அக்குபஞ்சர் முறையில் காலில் சிறு கல் குத்துவதில் இரத்த ஓட்டம் சீராக அமையும். கிரிவலம் செல்பவர்களின் தாய் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி நடப்பவர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்வது நல்லது. ஆண்கள் கிரிவலம் செல்லும் போது சட்டை அணியாமல் செல்ல வேண்டும். சந்திரனின் ஒளிக்கதிர்கள் உடலில் படுவதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
மலையை வரும்போது வலதுபுறமாக வருவதும், மேல் சட்டை அணியாமலும் தலைப்பாகை அணியாமலும், காலில் செருப்பு அணியாமலும் வரவேண்டும். ஏனெனில், இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான சித்தர்கள் கிரிவலம் செல்லுவார்கள். அவர்களின் உடலில் பட்ட காற்று நம்மையும் அறியாமல் நமது உடல் மீது பட்டாலே நமது முற்பிறவிபாவங்களை அழித்துவிடும் என்பது உண்மை. உடையை உடைமைகளை கையில் பிடித்துக்கொண்டு வருவதும் தவிர்க்க வேண்டியதாகும். மேலும் கிரிவலம் வரும்போது மனதில் இறைவன் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். வாகனங்களில் கிரிவலம் செல்வதை தவிர்த்து நடந்துதான் செல்ல வேண்டும். எங்கு கிரிவலத்தை தொடங்குகின்றோமோ அங்குதான் முடிக்கவேண்டும். கிரிவலம் வந்து முடித்தவுடனே குளிக்க கூடாது,உறங்கக் கூடாது என்பது ஐதீகம்.
எந்தெந்த நாட்களில் என்ன நன்மை
பவுர்ணமியன்று அண்ணாமலையாரை கிரிவலம் வந்து வழிபடுவது மரபாக இருந்தாலும் கூட, பிறநாட்களிலும் நாம் அந்த மலையை வலம் வந்து வழிபடலாம். வார நாட்களில் கிரிவலம் சுற்றினால் ஏற்படும் பலன்கள்:
ஞாயிறு: மரணத்துக்குப் பின் சிவபதம் (கைலாயம்) சேர்தல்
திங்கள்: செல்வவளம் கிடைத்தல்
செவ்வாய்: வறுமை, கடன் நீங்குதல்
புதன்: கல்வியில் வளம் (பள்ளி விடுமுறை காலங்களில் குழந்தைகளுடன் புதன்கிழமையில் வலம் வரலாம்)
வியாழன்: தியானம், யோகா முதலியவற்றில் பற்று ஏற்படுதல்
வெள்ளி: விஷ்ணுலோகமான வைகுண்டம் அடைதல்
சனி: கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பம் நீங்குதல்
அமாவாசை: சிவனின் பரிபூரண அருள், மன நிம்மதி கிடைக்கும் குழந்தை பெறுவதில் குறையுள்ள தம்பதிகள் தொடர்ந்து 48 நாட்கள் தம்பதி சமேதராக கிரிவலம் வந்தால் மக்கட்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மகேசனை வேண்டிக்கொண்டு மனதார கிரிவலம் வந்தால் நினைத்தது ஈடேரும் என்கின்றனர் முயற்சித்து பாருங்களேன்.

No comments:

Post a Comment