வெளியுலகப் பயிற்சி அளித்த "யாத்ரா'
First Published : 16 Sep 2012 12:00:00 AM IST
பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வது எல்லோரும் அறிந்ததே. திரும்பி வந்த பிறகு அது குறித்த கட்டுரை எழுதித் தர வேண்டும் என்ற அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால், இப்படியோர் அனுபவம் எத்தனைப் பேருக்கு கிடைத்திருக்கும்?
திருச்சி சமயபுரத்திலுள்ள எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 30 பேர் தில்லி சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஐஏஎஸ் அகாதெமி இயக்குநர் பதம்வீர் சிங், துணை இயக்குநர், இணை இயக்குநர் ஆஷிஷ் வச்சானி, விஞ்ஞான் பிரசார் மையத்தில் விஞ்ஞானி டி.வி. வெங்கடேசுவரன் உள்ளிட்டோரைச் சந்தித்து உரையாடிவிட்டு வந்திருக்கிறார்கள்.
பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டிலிருந்து சென்று சந்தித்து உரையாடிய முதல் மாணவர் குழு இதுதான்.
பயணத்தின் பெயர் "யாத்ரா 2012'. "இது வெறுமனே சுற்றுலா அல்ல; வெளி உலகப் பயிற்சி' என்கிறார் பள்ளியின் முதல்வர் க. துளசிதாசன்.
அவர் மேலும் கூறியது: "இந்தப் பயிற்சிக்கென வகுப்புகள் தொடங்கிய நாளில் இருந்தே மாணவர்களைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்கி விடுகிறோம். மொத்தமுள்ள பிளஸ் 1 மாணவர்கள் 1300 பேருக்கும் இரு நாள் ஆளுமைத் திறன் வளர்ப்புப் பயிற்சி.
தேர்வு மூலம் அதிலிருந்து 200 பேர் தெரிவு செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு மீண்டும் தொடர்ச்சியான பயிற்சிகள். சமூகம், அரசியல், மத- சாதிச் சிக்கல்கள், ஆட்சி, அதிகாரம், பொறுப்புகள், கடமைகள் குறித்த அத்தனை கோணங்களிலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
முடிவில் அதிலிருந்து 15 மாணவர்கள், 15 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களே "யாத்ரா'வில் பங்கேற்கிறார்கள். மாணவ, மாணவிகளுக்கான உடை, உணவு, தங்குமிடம், ஆளுமைகளைச் சந்திக்கும் ஏற்பாடுகள், அதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் பள்ளியின் செலவு. விமான டிக்கெட்டுகளை மட்டும் பெற்றோர்கள் ஏற்கிறார்கள்' என்றார் துளசிதாசன்.
யாத்ரா சென்று திரும்பிய மாணவ, மாணவிகள் சிலருடன் பேசினோம்.
மாணவி ஏ. அஷ்மிதா: பள்ளிக்கூடம் என்ற வட்டத்துக்குள்ளேயே இருந்த நாங்கள், அதை விட்டு வெளியே வந்து கற்கத் தொடங்கியிருக்கிறோம். பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், "நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும்' என்று சொல்லித்தான் தொடங்கி வைத்தார். பேருந்தில் சென்னை பயணம். அங்கிருந்து விமானத்தில் தில்லி.
சென்னை செல்லும் வழியில் கட்டிச் சென்ற சாப்பாட்டுடன் பேருந்து விழுப்புரம் அருகே கிராமத்தில் ஒதுங்கியது. வயல்வெளியில் மதிய உணவு. அதிகமாக இருந்த உணவுகளை வீணாக்காமல் அங்கே வேலை பார்த்த விவசாயிகளுக்குப் பகிர்ந்து வழங்கினோம். சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணனை சந்தித்தோம். "இந்தியாவில் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே வாழ்ந்தாலும் இந்தியா நல்ல நாடுதான்' என்றார் அவர்.
தில்லியில் நகர்ப்புறம் ஒரு மாதிரியாகவும், புறநகரம் ஒரு மாதிரியாகவும் இருந்தது எங்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. பிரம்மாண்ட கட்டடங்களை அடுத்து கூரைகளைக் கொண்ட சேரிகளும் இருக்கின்றன.
யாத்ராவில் நாங்கள் கண்ட ஒவ்வொரு நிமிஷங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
மாணவி சாரா ஷாஹீன்: "குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் முதல் தமிழ்நாட்டு மாணவர் குழு என்பதை அறிந்தபோது மிகவும் ஆனந்தமாக இருந்தது. நேரம் எத்தனை முக்கியமானது என்பது ராஷ்டிரபதி பவனில் உணர்ந்தோம்.
உங்களது பள்ளிப் பருவம் குறித்து கூறுங்கள் என்றபோது புன்முறுவலுடன் பள்ளிப் பருவத்தை நினைவு கூர்ந்தார் பிரணாப் முகர்ஜி.
மாசடைந்துள்ள கங்கை நதியைப் பார்த்தோம். குப்பைகளும், சேரிகளும் நிறைந்த தலைநகர் தில்லியைப் பார்த்தோம்.
ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநர் பதம்வீர்சிங் எங்களுடன்பேசும்போது, "யாராவது சொல்வதால் மட்டுமே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டாம். நீங்களாக முடிவெடுங்கள். அதுதான் முக்கியம்' என்று அறிவுறுத்தினார்.
17 வயதில் இப்படியொரு அனுபவம் எங்களுக்கு கிடைத்தது குறித்து எண்ணிப்பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. மறக்க முடியாத அனுபவம்'.
மாணவன் வி. கெüதம்: "நாடாளுமன்றத்துக்குள் நுழைய 3 மணி நேரம் பிடித்தது. திருச்சி சிவா எம்பி எங்களை ஒவ்வோர் இடத்துக்கும் அழைத்துச் சென்று காட்டினார். எம்பிக்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்தும் இடத்தில் எங்களையும் அமர வைத்து சாப்பிட வைத்தார். நாடாளுமன்ற வளாகத்தில் லாலு பிரசாத் யாதவை அழைத்து வந்து எங்களை அறிமுகப்படுத்தினார். "வாங்க, போங்க, போடு, மணக்கம் (வணக்கம்!)' எனத் தமிழில் சில சொற்களைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார் லாலு பிரசாத்.
விமானப் பயணமே ஓர் அனுபவம்தான். போகும்போது எதுவும் தெரியவில்லை. வரும்போது, குறிப்பாக இறங்கும்போது ஒரு குலுங்கு குலுங்கியபோது மனம் படபடவென அடித்துக் கொண்டது.
மாணவன் கே. கதிர் கிஷன்: ஐஏஎஸ் அகாதெமியில் உள்ள நூலகத்தை வாழ்நாள் முழுவதும் இருந்து படித்தாலும் படித்து முடிக்க முடியாது. அத்தனைப் பெரியது. அங்கு பதம்வீர்சிங், ஆஷிஷ் வச்சானி போன்றோரைச் சந்தித்துவிட்டு வெளியே வரும்போது மழை பிடித்துவிட்டது.
அதன்பிறகு, மாலை 4 மணிக்குத்தான் ராணுவப் பயிற்சி அகாதெமிக்குச் சென்றோம். எங்களுக்கு பிற்பகல் 2 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. நேரத்துக்குச் செல்லாததால் எங்களை அனுமதிக்கவில்லை. சற்று உள்ளே பார்த்துவிட்டுத் திரும்பவும் அனுமதிக்கவில்லை. நேரத்தில் அத்தனை கறார்.
விஞ்ஞான் பிரசார் பவனில் விஞ்ஞானி டி.வி. வெங்கடேசுவரனைச் சந்தித்தோம். "சூப்பர் கம்ப்யூட்டரை' எங்களுக்குக் காட்டி விளக்கினார் அவர். இவையெல்லாம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றபோது, ஏன் நாமே தயாரிக்கக் கூடாது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
புதிய புதிய கோணங்களில் அறிவியல் நிகழ்வுகளை, செயல்பாடுகளை விளக்கினார் வெங்கடேசுவரன்.
மாணவர்களுடன் யாத்ரா பயணத்தை ஒருங்கிணைத்துச் சென்ற எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் கூறியது:
""இந்திராகாந்தி சுடப்பட்ட சப்தர்ஜங் இல்லத்துக்கும், காந்தியடிகள் சுடப்பட்ட பிர்லா வீட்டுக்கும் போனோம். மனம் கனத்தது. பயணத்துக்கு முன்பு வரை 58 வயதுக்காரனாக இருந்த எனக்கு திரும்பிய பிறகு 40 வயதுக்காரனாக மாறிவிட்டேன். இளம் மனங்களின் போக்கை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இப்பயணம் அமைந்தது.
நாட்டின் மிக உயர்ந்த நிறுவனங்களும், அவற்றை ஆளும் மிகப்பெரிய ஆளுமைகளும் தொட்டுவிடும் தூரத்தில் மாணவர்களுக்குப் பக்கத்தில் வந்து நின்ற அரிய வாய்ப்பு உண்மையில் அரிதானதுதான். சில அதிர்வலைகளை அவர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும். அது தொடர்ந்து வேலை செய்யும்'' என்றார் தமிழ்ச்செல்வன்.
மாணவர்களுடன் இந்தப் பயணத்தில் சென்று திரும்பிய பள்ளியின் இணைச் செயலர் டாக்டர் ப. சத்தியமூர்த்தி கூறியது:
"இரண்டாம் ஆண்டாக இந்தப் பயணம் செல்கிறோம். இரண்டு ஆண்டுகளும் நானும் சென்று வந்திருக்கிறேன். மாணவர்களுக்கு மட்டுமல்ல, நம்மைப் போன்றோருக்கே இந்தப் பயணம் நிறைய சொல்லித் தந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மாணவர்களில் 30 பேரை மட்டுமே அழைத்துச் செல்ல முடிகிறது என்ற வருத்தம் மட்டுமே மேலிடுகிறது' என்றார் சத்தியமூர்த்தி.
வெறுமனே கல்விச் சுற்றுலா என்ற பெயரில் பொழுதுகளையும், பணத்தையும் வீணாக்குபவர்கள், இவர்களிடம் கொஞ்சம் தொழில்நுட்ப ஆலோசனை(!) பெற்றுச் செல்வது நல்லதென்றே தெரிகிறது.
சா.ஜெயப்பிரகாஷ் DINAMANI